இஸ்ரோ விஞ்ஞானிகள் வீரமுத்து வேல் மற்றும் நிகர் ஷாஜி ஆகியோர் இன்று டெல்லி சென்றிருந்தனர். இவர்களை டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராம் சங்கர் ராஜா நேரில் சந்தித்தார். அப்போது தமிழ் உலகம் மட்டுமல்லாமல் விண்ணுலகமும் போற்றும் இடத்தில் தமிழ் விஞ்ஞானிகள் இருவரும் இடம்பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளதாக இருவரையும் பாராட்டினார். மேலும் அவர்களின் பங்களிப்பிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்திய அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மிகப்பெரிய இயக்குநர் பொறுப்பில் இருக்கும் இந்த இருவரும் தமிழர்கள் ஆவர். சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 என்ற விண்கலமும் சூரியனுக்கு அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 என்ற விண்கலமும் உருவாக, நடைமுறைப்படுத்த, வெற்றிகரமாக விண்ணில் செலுத்த அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழுவிற்கு இவர்கள் இருவரும் இயக்குநர்கள் ஆவர். இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விஞ்ஞானி நிகர் ஷாஜி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இருவரும் உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அத்தனை தமிழர்களுக்கும் இது பெருமை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் உலக அளவில் இப்போது முன்னிலை பெற்றுள்ளதற்கு இவர்கள் இருவரின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது.
சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல் 1 விண்கலங்கள் இந்தியாவையும் இந்தியப் பொருளாதாரத்தையும், முதலீட்டையும் அதிகரிக்கும் என்றும் வருங்காலத்தில் அதிக பலன்கள் தரும் என்றும் இருவரும் கூறினர். உலக நாடுகள் இந்தியாவின் இந்த இரண்டு சாதனைகளை உற்று நோக்கிப் பார்த்து வருவதாகவும் நமது விஞ்ஞானிகளின் அறிவுத்திறனைக் கண்டு வியப்பதாகவும் கூறினார்கள். சந்திரயான் திட்ட இயக்குநர் வீரமுத்து வேல் சந்திரனுக்கு சென்றுள்ள சந்திரயான் 3 விண்கலம் நிலவின் மண் மற்றும் இதர கனிம வளங்களை ஆராய்ந்து எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான ஆதாரங்களைச் சேகரித்து வழங்கும் என்று கூறினார். அதேபோல் சூரியனுக்கு சென்றுள்ள ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் வட்டப் பாதைகளை ஆராய்ந்து, அதன் கதிர்வீச்சுகளை ஆய்வு செய்து உலக வெப்ப மயமாதல் போன்றவற்றை ஆராய்ந்து சொல்லும் என்று நிகர் ஷாஜி கூறினார்.
தமிழகத்தின் இந்த இரண்டு தலைசிறந்த விஞ்ஞானிகள் இன்னும் பல்வேறு சாதனைகள் செய்யவும் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மேலும் உயர டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ராம் சங்கர் பாராட்டினார். அவருடன் டெல்லி தமிழ்ச் சங்க செயலாளர் முகுந்தனும் கலந்து கொண்டு டெல்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பாகவும் வாழ்த்தினார்.