அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பல மாநில அரசுகளிடம் பணம் இல்லை என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. சார்பில் நடந்த ஜன் சம்வாத் காணொலி பேரணியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, "கரோனா வைரஸ் பரவலால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு இதனால் சுமார் ரூ.10லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். பல மாநில அரசுகளிடம் அடுத்த மாதம் ஊதியம் வழங்கக்கூடப் பணம் இல்லாத சூழல்தான் நிலவுகிறது. ஆனாலும், இந்தச் சூழலைத் திறம்படக் கையாண்டு வருகிறோம்.
கடந்த 55 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யமுடியாத விஷயங்கள் அனைத்தையும் நரேந்திர மோடி அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்துள்ளது. நம்முடைய கிராமங்களில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் கரோனாவால் சிக்கலில் இருக்கின்றன. இதனால் அவர்கள் மிகப்பெரிய சிரமத்தையும், துன்பத்தையும் சந்திக்கிறார்கள்.
ரூ200 லட்சம் கோடி ஜி.டி.பி.-யில் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம், ரூ.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு என்றால் நினைத்துப்பாருங்கள், மத்திய அரசு இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வருகிறது. கரோனா வைரஸுக்கு விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று நம்புகிறேன். அதுவரை நாம் கரோனாவுடன் போராட வேண்டியது இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.