
பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் உருமாறிய கரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கரோனா உறுதியானதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நவம்பர் 25- ஆம் தேதி முதல் டிசம்பர் 23- ஆம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 33,000 பேருக்கு கரோனா மற்றும் உருமாறிய கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இந்த 33,000 பேரில் 114 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், அதில் 6 பேருக்கு உருமாறிய கரோனா உறுதியாகியுள்ளது. உருமாறிய கரோனா உறுதிச் செய்யப்பட்ட 6 பேரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த 6 பேருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், உருமாறிய கரோனா உறுதிச் செய்யப்பட்ட 6 பேருடன் வந்த பயணிகள், குடும்பத்தினர் ஆகியோரை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கரோனா பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தி, கரோனா உறுதியான மாதிரிகளை மாநில அரசுகள் கொல்கத்தா, புவனேஸ்வர், பெங்களூர், புனே, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் டென்மார்க், ஸ்வீடன், இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின், கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது." இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.