புதுச்சேரி மாநிலத்தில் கேசினோ சூதாட்ட விடுதிகளும், லாட்டரி சீட்டும் கொண்டு வர இருப்பதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இது தொடர்பான கோப்புகள் தன்னிடம் வந்தால் "புதுவையின் அடையாளத்தையே கேள்விக்குறியாக்கும் இந்த திட்டங்களுக்கு" அனுமதி அளிக்கமாட்டேன் என்று அறிக்கை வெளியிட்டுயிருந்தார்.
இந்நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டம், தொடர் பிரச்சாரம், துண்டு பிரசுரம் என பல்வேறு எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கிராமப்புற பகுதிகளில் 14,15,16 ஆகிய மூன்று நாட்களுக்கு பரப்புரை செய்ய முறையாக காவல் துறையின் அனுமதி பெறப்பட்டு 14.02.2020 அன்று பரப்புரை தொடங்க இருந்த சூழ்நிலையில் காவல் கண்காணிப்பாளர் வழங்கிய அனுமதியை ரத்து செய்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆணை வழங்கினார்.
முதல்வரின் அதிகார அழுத்தம் காரணமாகவே கொடுத்த அனுமதி மறுக்கப்பட்டது என்று கூறி, அதனை கண்டித்து இன்று புதுவை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
சட்டம் வழங்கி இருக்கின்ற பேச்சுரிமையை பறிக்கின்ற நடவடிக்கையை கண்டித்து நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் பல்வேறு சமூக செயற்பாட்டு இயக்கங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றன.
சுதேசி பஞ்சாலையிலிருந்து ஊர்வலமாக வந்தவர்களை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது மக்களை பாதிக்கும் கேசினோ சூதாட்டம் மற்றும் லாட்டரி திட்டத்தை கைவிட கோரியும், இவைகளின் பாதிப்புகள் குறித்து மக்களிடம் பரப்புரை செய்ய அனுமதி வழங்க கோரியும் முழுக்கங்கள் எழுப்பினர்.