இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். அந்த வகையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. வரும் ஜூன் 14ஆம் தேதி இதற்கான முடிவுகள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில்தான் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, நீட் தேர்வு வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை என முறைகேடு சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. மேலும் நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கும் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய தேர்வு முகமையின் டிஜி சுபோத் குமார் சிங் பேசுகையில், “நீட் தேர்வு முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும். தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். நீட் தேர்வு நடைபெற்ற 4 ஆயிரத்து 750 மையங்களில் 6 தேர்வு மையங்களில்தான் முறைகேடு தொடர்பாக பிரச்சனை நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்தப் புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். அதன்படி யூ.பி.எஸ்.சி. (UPSC) முன்னாள் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஒரு வாரத்தில் விசாரித்து அறிக்கை வழங்கும். 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 1600 மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நீட் தேர்வில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. வினாத்தாள் கசிவு எதுவும் நிகழவில்லை. நீட் தேர்வின் முழு செயல்முறையும் மிகவும் வெளிப்படையானது” எனத் தெரிவித்துள்ளார்.