இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் இன்னும் அவசர கால அங்கீகாரம் வழங்கவில்லை. உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட வெளிநாட்டவரை மட்டுமே தங்கள் நாடுகளுக்குள் அனுமதிப்பது என்ற முடிவில் பல்வேறு நாடுகள் உள்ளன. இதனால் கோவாக்சின் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாட்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் வெளிநாடு செல்வதிலும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், தங்களது கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு வருவதற்கும், ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலிருந்து இன்னொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்கு செல்வதற்கும் வசதியாக ஜூலை 1 முதல் 'கிரீன் பாஸ்' என்ற அனுமதிச்சீட்டு நடைமுறையைச் செயல்படுத்தவுள்ளது. இதனைப் பெறுவதற்கான நடைமுறையில், ஐரோப்பிய மருந்துகள் அமைப்பின் ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே கிரீன் பாஸ் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு இதுவரை வேக்ஸேவ்ரியா, அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே இதுவரை வழங்கியுள்ளது. இதனால் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சிக்கல் விரைவில் தீர்க்கப்படும் என சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிஷீல்டை எடுத்துக் கொண்ட ஏராளமான இந்தியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பயணம் மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நான் உணர்கிறேன், அனைவருக்கும் நான் உறுதியளிக்கிறேன். இதை நான் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பவர்களிடம் எடுத்துச் சென்றுள்ளேன். இந்த விஷயத்தை விரைவில் தீர்ப்போம் என்று நம்புகிறேன். கட்டுப்பாட்டாளர்களிடமும் மற்றும் இராஜதந்திர மட்டத்திலும் இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.