
இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் 04-06-24 அன்று வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
நேற்றிலிருந்தே பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபுநாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் முக்கிய துறைகளை பாஜக தலைமையிடம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, வேளாண்மை, ஐ.டி, நீர்வளத்துறை ஆகிய இலகாக்களின் அமைச்சர் பதவிகள் என மூன்று கேபினட், மூன்று இணை அமைச்சர் பதவிகள் சந்திரபாபு நாயுடு தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. மூன்று கேபினட், இரண்டு இணை அமைச்சர் பதவிகளை விரும்பும் நிதிஷ், பீகாரருக்கு சிறப்பு அந்தஸ்து, குறைந்தபட்ச பொதுசெயல் திட்டம் வகுக்க வேண்டும் என நிபந்தனை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேபோல் வேளாண்துறை அமைச்சர் பதவியை மதச்சார்பற்ற ஜனதா தள எம்.பி குமாரசாமி எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பீகாரில் ஐந்து தொகுதிகளை வென்ற சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தியும் அமைச்சரவையில் இடம்பெற விருப்பம் தெரிவித்துள்ளது. முதல்வராக இருப்பதால் ஏக்நாத் ஷிண்டே எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க கூட்டணிகளை திரட்டி உள்ள பாஜகவிற்கு இது பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜூன் எட்டாம் தேதி பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்கும் நிலையில் அதில் கலந்துகொள்வதற்காக சந்திரபாபுநாயுடு தன்னுடைய முதல்வர் பதவியேற்பு விழாவை ஜூன் 12 ஆம் தேதி தள்ளி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக சந்திரபாபுநாயுடு மற்றும் நிதீஷ்குமார் தரப்பில் பாராளுமன்ற சபாநாயகர் பதவி கோரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.