5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை முதல் மாடியில் இருந்து கீழே தள்ளிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள கார்பரேஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர் கீதா தேஷ்வால். தன்னுடைய பள்ளியில் படிக்கும் 5 ஆம் வகுப்பு மாணவியுடன் நிகாம் பிராத்மிக் என்கிற பள்ளியின் முதல் தளத்தில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கோபமடைந்த ஆசிரியர் கீதா தேஷ்வால் மாணவியைத் தன் கைகளில் வைத்திருந்த கத்தரிக்கோலால் தாக்கி மாடியிலிருந்து கீழே தள்ளியுள்ளார்.
கீதா தேஷ்வால் மாணவியை முதல் தளத்தில் இருந்து தூக்கி வீச முற்படுவதைப் பார்த்த மற்றொரு ஆசிரியர் இதனைத் தடுக்க முயற்சித்துள்ளார். எனினும் ஆத்திரத்தில் இருந்த கீதா தேஷ்வால் மாணவியை முதல் தளத்தில் இருந்து தள்ளிவிட்டுள்ளார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதனைக் கண்டு உடனடியாக மாணவியை பாரா ஹிந்து ராவ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் மாணவிக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும், பலத்த காயங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிய ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளைச் செய்தனர்.
நல்வாய்ப்பாக மாணவிக்கு பலத்த காயங்கள் ஏதும் ஏற்படாததால் மாணவி உயிர்தப்பினார். இதனிடையே, பள்ளிக்கு அருகில் இருந்த மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதோடு மட்டுமல்லாமல் பள்ளியின் முன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். புகாரின் பேரில் ஆசிரியரை கொலை முயற்சி வழக்கில் கைது செய்த காவல்துறையினர் மாணவியை கீழே தள்ளியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.