Skip to main content

'நாரி சக்தி வந்தன்' மசோதா நிறைவேற்றம்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

“Nari Shakti Vandan”- Passage of Bill

 

புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றிய பிறகு, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்கி நடைபெற்றது.

 

வாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு 454 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், இரண்டே இரண்டு உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மசோதாவானது பெரும்பான்மை ஆதரவு என்ற பட்சத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்