சமீப காலமாக நாடு முழுவதும் ப்ளூ காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதோடு கரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வந்த நிலையில் அதன் விளைவாக பல்வேறு மாநில அரசுகளுக்கு கடிதங்கள் வாயிலாக முன்னெச்சரிக்கையோடு நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த உயர்மட்ட குழு ஆலோசனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதன் அதிகாரிகள் கலந்துகொண்டனர். எந்தெந்த மாநிலங்களில் பாதிப்புகள் அதிகமாக இருக்கிறது; என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; போதிய அளவு மருந்துகள், மருத்துவ கட்டமைப்புகள் உள்ளதா என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் பிரதமர் தலைமையிலான ஆலோசனையின் முழு உத்தரவுகள் மற்றும் மாநிலங்களுக்கான அறிவுறுத்தல்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.