கரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட அவர், தொடர்ந்து பேசுகையில் ''நாட்டில் தற்பொழுது படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை முழுமையாக இல்லை. உலகின் பல நாடுகளிலும் ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருகிறது. பரவிவரும் ஒமிக்ரான் குறித்து பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். முககவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் போன்றவற்றை எப்போதும் மறந்துவிடாதீர்கள். மாநில அரசுகளுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஒமிக்ரானை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 18 லட்சம் தனிமைப்படுத்துதல் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. நாடு முழுவதும் ஆக்ஸிஜன் வசதியுடன் 5 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க 90 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கடும் சவால்களுக்கு இடையே தடுப்பூசி செலுத்தும் திட்டம் பாதுகாப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மேலும் பல தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி இந்தியாவில் முதன்முறையாகப் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் மருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இந்தியா சீரான பொருளாதார பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கோவா, உத்தரகாண்டில் முதல் தவணை தடுப்பூசி 100% செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 10 முதல் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்'' என்றார்.