மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருந்து பிரிந்தன. இதன் காரணமாக யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் , சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேலையில், எதிர்பாராத விதமாக இன்று காலையில் ஆளுநர் முன்னிலையில் மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், "இது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு. பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இது மகாராஷ்டிரா அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பான சூழலில், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இணைந்தால், அவருக்கு உரிய கவுரவம், அங்கீகாரம் வழங்கப்படும்" என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.