கடந்த 15 ஆண்டுகளில் 50 சிறுமிகளை, உளவியல் நிபுணர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர், உளவியல் நிபுணர் ராஜேஷ் மீது பாலியல் புகார் ஒன்றை ஹட்கேஷ்வர் காவல் நிலையத்தில் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ராஜேஷ் பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
உளவியல் நிபுணரான ராஜேஷ்(47), பண்டாரா, கோண்டியா போன்ற கிராமங்களில் தனிப்பட்ட மேம்பாட்டு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளார். உளவியல் பிரச்சனைக்காக முகாம்களுக்கு வரும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து அவர்கள் மிரட்டி வந்துள்ளார். சிறுமிகளுக்கு திருமணம் ஆன பிறகும் மிரட்டல் விடுத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இது போல், கடந்த 15 ஆண்டுகளில் 50 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ராஜேஷை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஷ், பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, காவல்துறை சிறப்பு விசாரணைக் குழுவை உருவாக்கி விசாரணையை மேற்கொண்டு வருகிறது.