
இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாயிரத்திற்கும் கீழாக பதிவாகி வந்த தினசரி கரோனா பாதிப்பு, தற்போது இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பரவலின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் நிலையில், டெல்லியில் நேற்று மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 700ஐ கடந்தது. இது முந்தைய நாள் பாதிப்பைவிட 7 மடங்கு அதிகமாகும்.
இந்த நிலையில், டெல்லியில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது அந்த மாநில அரசு. அதிகரித்துவரும் கரோனா பரவலின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, மிசோரம் ஆகிய 5 மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.