2020 ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா பட்டத்தை தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மானசா வாரணாசி வென்றுள்ளார்.
ஆண்டுதோறும் இந்தியா சார்பில் உலக அழகி போட்டியில் கலந்துகொள்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 'மிஸ் இந்தியா' அழகி போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றிபெறுபவர்கள் அவ்வாண்டு நடைபெறும் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்வார்கள். அந்தவகையில், இந்த ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மானசா வாரணாசி வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான மானசா ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். பொறியியல் படிப்பை முடித்த இவர், நிதி தகவல் பரிமாற்ற ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கல்வி பயிலும் காலம் முதல் மாடலிங் துறையில் செயல்பட்டு வந்த மானசா, இவ்வாண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டார். இந்தியா முழுவதிலுமிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நேற்று (10.02.2021) மும்பையில் நடைபெற்றது. இதில் மிஸ் இந்தியா 2020 வெற்றியாளராக 23 வயதான மானசா வாரணாசி தேர்வு செய்யப்பட்டார். அவருக்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு மிஸ் இந்தியாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ரத்தன் சிங் ராவ் மகுடம் சூட்டினார்.
இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் இவர் இந்தியா சார்பில் கலந்துகொள்ள உள்ளார். இந்த மிஸ் இந்தியா போட்டியில் உத்தரப்பிரதேசத்தின் மன்யா சிங் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதேபோல பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்பவரைத் தேர்ந்தெடுப்பதற்கான 'மிஸ் டிவா 2020' போட்டியில், அட்லைன் காஸ்டெலினோ வென்றுள்ளார்.