இந்திய பாஸ்போர்ட்களில் தாமரை சின்னம் அச்சிடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
நேற்று மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புதிய பாஸ்போர்ட்டுகளில் ஏன் 'தாமரை' அச்சிடப்பட்டிருக்கிறது என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், போலி பாஸ்போர்ட்களை அடையாளம் காண்பதற்கான மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாக தாமரை சின்னம் பாஸ்போர்ட்களில் அச்சிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் வருங்காலங்களில் பிற தேசிய சின்னங்களும் சுழற்சி முறையில் அச்சிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், “தாமரை நமது தேசிய மலர். மேலும் போலி பாஸ்போர்ட்களை அடையாளம் காணும் வகையிலான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாகும்” என்றார்.