
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பற்றி எரிந்த வீட்டில், கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, யஷ்வந்த் வர்மா ஏற்கெனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்திற்கே அவரை பணிமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், தங்கள் சொத்து விவரங்களை பொது தளத்தில் வெளியிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அடங்கிய கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அதில், உச்சநீதிமன்றத்தின் 30 நீதிபதிகள், தங்கள் சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். நீதித்துறை வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி பூஷன் ராமகிருஷ்ணா கவாய், நீதிபதி பி.வி. நாகரத்னா, நீதிபதி விக்ரம் நாத் மற்றும் நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி ஆகியோர் தங்கள் சொத்து விவரங்களை சமர்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.