பிரதமரின் அறிவுறுத்தல்படி செயல்பட ஏதுவாக காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தை முழு செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என புதுச்சேரி (தெற்கு) மாநில அமைப்பாளரும், திமுக எம்.எல்.ஏவுமான சிவா, பாஜக அமைச்சர் நமச்சிவாயத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். காதி மற்றும் கிராம தொழில்களின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் திட்டமிடுவது, அத்தொழில்களைத் தொடங்க ஊக்குவிப்பது, காதி மற்றும் கிராம தொழில்களை அமைப்பதன் மூலம் தகுதியானவர்களுக்கு வேலை வழங்குவது, அத்தொழில்களின் வளர்ச்சிக்கு கடன்களை வழங்குவது, அத்தகைய தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் கருவிகளை வழங்குவது, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைக் கண்காட்சிகளாக வைப்பது, விற்பனை செய்து தருவது, அதற்காக அரசிடம் மானியம் பெற்று அப்பொருட்களுக்குத் தள்ளுபடி வழங்குவது ஆகிய பணிகளை செய்வதற்காக பாண்டிச்சேரி காதி மற்றும் கிராம தொழில் வாரியம் உருவாக்கப்பட்டது.
ஆனால், இந்த வாரியத்தின் செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக முடங்கியுள்ளது. சரியாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. தற்போது 7 மாத சம்பளம் நிலுவையில் உள்ளது. பொதுமக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட தள்ளுபடி தொகை ரூ. 4.5 கோடி, பல ஆண்டுகளாக வாரியத்திற்கு வழங்கப்படாமல் உள்ளது. இந்தத் தொகைதான் தொழில் தொடங்குவதற்கு கடனுதவி உள்ளிட்டவற்றை வாரியம் வழங்க உதவியாக இருக்கும். அரசு வழங்காததால் இதையும் வாரியம் செய்ய முடியவில்லை. புதுச்சேரி கதர் வாரிய தொழிலாளர்களுக்கு இ.பி.எஃப், இ.எஸ்.ஐ, இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்தவில்லை. கடந்த ஓராண்டு மட்டுமே 9 பேர் இறந்துள்ளனர். இன்சூரன்ஸ் பிரிமியம் தடையின்றி செலுத்தப்பட்டிருந்தால் அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ. 7 லட்சம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து கிடைத்திருக்கும். அதுவும் கிடைக்காமல் அக்குடும்பம் நிர்க்கதியாக உள்ளது. எதிர்காலத்தில் இந்நிலை தொடராமல் இருக்க உடனடியாக அரசு இன்சூரன்ஸ் பிரிமியம், இ.எஸ்.ஐ, பி.எஃப் உள்ளிட்ட நிலுவை தொகைகளையும் வழங்க வேண்டும்.
இந்த வாரியம் சிறப்பாக செயல்பட தொடங்கினால் இளைஞர்கள் கதர் தொழிலில் வேலைவாய்ப்பு பெறுவர். அவர்களது கதர் பொருட்கள், சுற்றுலா பயணிகள் வருகைக்கும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். எனவே புதுச்சேரி காதி மற்றும் கிராம தெழில் வாரியத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவந்து, அரசு தர வேண்டிய நிதிகளை முழுமையாக கொடுத்து, சிறப்பாக செயல்படச் செய்ய வேண்டும். பிரதமர் மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களிடம் பேசும்போது காதி பொருட்களை வாங்குவது தேசத்துக்கு ஆற்றும் சேவை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், புதுச்சேரியில் கதர் பொருட்களை உற்பத்தி செய்வதே, வாரிய செயல்பாட்டின் முடக்கத்தால் முடங்கிப்போய் உள்ளது. எனவே பிரதமரின் கருத்துக்கு செவி சாய்த்து, புதுச்சேரியில் ஆளும் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசில் பாஜகவின் முதன்மை மந்திரியாக இருப்பவர் இந்த விஷயத்தில் தீவிரமாக செயல்பட்டு, சம்பளமின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி, ஊழியர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் நோக்கில் புதுச்சேரி காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தை முழு செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் பிரதமரின் கூற்றுப்படி மக்களுக்கு கதர் பொருட்களைக் கிடைக்கச் செய்ய முடியும் என்பதால், இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.