
எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 292 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 59 பேர் பணியாற்றி வரும் நிலையில் மெக்கானிக்கல் துறை பேராசிரியராக மதன்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் பேராசிரியர் மதன்குமார் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 17 வயது மாணவி உட்பட மூன்று மாணவிகள் கல்லூரி முதல்வர் பேபி லதாவிடன் புகார் கொடுத்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட பேபி லதா கல்லூரி பெண்கள் பாதுகாப்பு கமிட்டியிடம் அந்த புகாரை கொடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய கல்லூரி பெண்கள் பாதுகாப்பு கமிட்டி மாணவிகளை அழைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்தின் கவனத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து, நேற்று கல்லூரிக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபு, விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் எட்டயபுரம் தாசில்தார் சுபா ஆகியோர் பாலிடெக்னிக் கல்லூரில் இன்று முகாமிட்டு பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பிற மாணவிகளிடமும், கல்லூரி பேராசிரியர்கள் அலுவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே குற்றச்சாட்டு குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டுமென மாணவிகள் கல்லூரி வாசல் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளிடம் தாசில்தார் சுபா மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து செய்தனர். அதேசமயம், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியரை கைது செய்ய வேண்டும் ன வலியுறுத்தி மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பூ மயில் தலைமையில் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இச்சம்பவம் எதிரொலியாக எட்டயபுரம் பாலிடெக்னிக் கல்லூரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி