கோவில் உண்டியலில் பக்தர் ஒருவர் தனது ஐபோனை காணிக்கையாக போட்டுவிட்டுச் சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது சுப்ரமணியன் சுவாமி கோவில். இந்தக் கோவிலில் நேற்று உண்டியலில் பக்தர்களால் போடப்பட்ட காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது, கோவில் நிர்வாகி உண்டியலில் ஐபோன் 6 எஸ் ரக செல்போ இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அதைக் கோவில் நிர்வாகத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதுவரை கோவில் உண்டியலில் தங்கநகைகள், பணம் வருவது வழக்கம். ஆனால், ஸ்மார்ட்போன் கிடைத்திருப்பது இதுதான் முதல்முறை. இதை உண்டியலில் போட்டவர் தான் சமீபத்தில் திறந்திருக்கும் செல்போன் கடையில் நல்லபடியாக வியாபாரம் நடக்கவேண்டி செல்போனை காணிக்கை ஆக்கியிருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தத் தகவலை அரசுக்கு கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இருந்தபோதிலும், அறநிலையத்துறை விதிகளின் படி, உண்டியலில் போடப்படும் எலெக்ட்ரானிக் சாதனங்களை புதைத்துவிட வேண்டும் என கோவில் நிர்வாக தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.