
திருவாரூரில் விநாயகர் கோவில் ஒன்றில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி லஞ்சம் பெற்ற அதிகாரியை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் ஜோதி. இவர் மன்னார்குடியில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பொங்கு சனீஸ்வரர் கோவிலில் பணியாற்றி வந்த எழுத்தர் சசிகுமார் பணி ஓய்வுபெறும் நிலையில், அவருடைய சம்பள தொகையை ஒட்டுமொத்தமாக கொடுக்க ஜோதி ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சசிகுமார் திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபாலிடம் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் மன்னார்குடியில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டு விசாரணை செய்தனர். மேலும் லஞ்சம் பெற முயன்ற ஜோதியை கையும் களவுமாக பிடித்து போலீசார் அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் அந்த கோவிலுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை வழங்கியிருந்த நிலையில் அதனை ஜோதி அவருடைய வீட்டிற்கு எடுத்துச் சென்று சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அதேபோல கோவில் சார்பாக ஏலம் விடப்படும் பொருட்களை முறையாக கணக்கில் காட்டாமல் இருந்ததும் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.