Skip to main content

வருங்கால கணவரைக் கொலை செய்ய திட்டமிட்ட பெண்; விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Published on 03/04/2025 | Edited on 03/04/2025

 

Woman hires man to thrash her future husband in pune

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தைத் தவிர்க்க மணமகனைக் கொலை செய்ய பெண் ஒருவர் திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் மயூரி சுனில் டாங்டே. இவருக்கும் மகி ஜல்கான் பகுதியைச் சேர்ந்த சாஹர் ஜெயசிங் என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஹோட்டலில் சமையல்காரராக பணிபுரிந்த சாஹர் மீது, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி 5 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதில், சாஹருக்கு தலை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. 

அந்த புகாரின் அடிப்படையில், சம்பவத்தில் ஈடுபட்ட ஆதித்ய ஷங்கர் டாங்டே, சந்தீப் தாதா கவ்டே, சிவாஜி ராம்தாஸ் ஜாரே, சூரஜ் திகம்பர் ஜாதவ் மற்றும் இந்திரபானு சகாரம் கோல்பே உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சாஹரை கொலை செய்ய அவரது வருங்கால மனைவி மயூரியே கொலை செய்ய அவர்களை வேலைக்கு அமர்த்திருக்கிறார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. 

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் மயூரிக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர், சாஹரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி மயூரியும் அவரது நண்பர் சந்தீப் கவ்டேவும், ஒப்பந்தக் கொலையாளிகளுக்கு ரூ.1.50 லட்சம் கொடுத்து சாஹரை கொலை செய்ய கூறியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மயூரி மற்றும் சந்தீக் கவ்டே மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்