ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, அம்மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். முதலில் அரசு நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதே போல் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில், ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் கட்டப்பட்ட "பிரஜா வேதிகா" இல்லத்தை இடிக்க உத்தரவிட்டார். அந்த இல்லத்துடன் சேர்ந்து கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் நாயுடுவின் இல்லத்தையும் இடிக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஆந்திர மாநில பொதுத்துறை அதிகாரிகள், கட்டிடத்தை முழுவதும் இடித்தனர். இது குறித்து முதல்வர் ஜெகன் அளித்துள்ள விளக்கத்தில் கிருஷ்ணா நதியின் அருகில், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலும், அரசின் விதியை மீறி கட்டப்பட்டதாக கூறினார். அதனால் தான், இந்த கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கும், அவரது குடும்பத்திற்கும் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்து முதல்வர் ஜெகன் உத்தரவிட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு எனக்கு உரிய பாதுகாப்பை அளிக்கவில்லை. எனது உயிருக்கு இருக்கும் ஆபத்தை வைத்து ஆளும் கட்சி விளையாடுகிறது. எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிந்தும், அரசு பாதுகாப்பை குறைத்துள்ளது. எனக்கு ஏதாவது நடந்தால் யாரும் அரசைக் கட்டுப்படுத்த முடியாது. ஆந்திர மாநிலம் முழுவதும் பற்றி எரியும் என ஆவேசமாக பேசி முதல்வர் ஜெகனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.