
வாடகை கார், பைக் டாக்சி போன்ற வாகனங்கள் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வேகமாகவும், பயணக் கட்டணம் குறைவாகவும் கொடுத்துச் செல்கின்றனர். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகரில் ஊஃபர், ரேபிடோ, ஓலா போன்ற சில நிறுவனங்களின் பைக் டாக்சி சேவைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியது. இதற்கு ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த அனுமதியால் தங்களின் வருவாய் பாதிக்கப்படுவதாகக் கூறி போராட்டங்கள் நடத்தினர். ஆனால், அன்றைய அரசு தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே, பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுப்பதாகப் பல புகார்கள் எழுந்தன. அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு பெங்களூர் பகுதியில் பைக் டாக்சியில் சென்ற பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த சூழ்நிலையில், மின்சார பைக் டாக்சி திட்டத்துக்கு கர்நாடகா காங்கிரஸ் அரசு கடந்தாண்டு தடை விதித்தது.
காங்கிரஸ் அரசு தடை விதித்ததை எதிர்த்து ஓலா, ரேபிடோ, ஊஃபர் போன்ற டாக்ஸி நிறுவனங்களின் கூட்டமைப்பு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவையை அனுமதிக்க வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை, உயர்நீதிமன்ற நீதிபதி ஷியாம் பிரசாத் அமர்வு முன்பு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஷியாம் பிரசாத், ‘பைக் டாக்ஸிக்கான உரிய சட்டங்களை அரசாங்கம் அமைக்கும் வரை பைக்குகளை வணிகப் போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட முடியாது. எனவே, ரேபிடோ, உபேர் உள்ளிட்ட பைக் டாக்ஸிகளை கர்நாடகாவில் 6 வாரங்களுக்கு தடை செய்ய வேண்டும். அதற்குள் அரசு, சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.