தொற்றில்லா நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டதைப் பாராட்டும்விதமாக கேரளாவுக்கு ஐ.நா. விருது வழங்கப்படுகிறது.
தொற்றில்லா நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகளில் சிறந்து விளங்கியதற்காகக் கேரளாவுக்கு இந்த ஆண்டுக்கான ஐ.நா. விருது வழங்கப்படுகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் அறிவித்துள்ளார். ரஷ்யா, பிரிட்டன், மெக்சிகோ, அர்மேனியா உள்ளிட்ட ஆறு நாடுகளுடன் கேரளா மாநில அரசிற்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது. ஐ.நா.வின் வரலாற்றிலேயே ஒரு மாநிலத்தின் சுகாதாரத் துறைக்காகச் சிறப்பு விருது வழங்கப்படுவது இதுதான் முதல் முறையாகும்.
இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறும்பொழுது, "கரோனா பாதிப்புள்ள காலங்களில் இறப்பு விகிதங்களைக் கட்டுப்படுத்தி உள்ளோம். தொற்றில்லா நோய் மீதும் நாங்கள் தீவிர கவனம் செலுத்தினோம். சுகாதாரத் துறையில், அயர்வின்றி சேவை செய்ததற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள அடிப்படை சுகாதார மையம் முதல் அரசு மருத்துவமனைகள் வரை வாழ்க்கை முறை மாற்றத்தால் வரும் நோய்களான இதயநோய்கள், நீரிழிவு, நீரிழிவில் அனைத்து வகைகளுக்கும், ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைப்பழக்கம், குடிப்பழக்கம், புற்றுநோய், போதைமருந்து பழக்கம் என அனைத்துக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. தொற்று அல்லாத நோய்களைத் தடுப்பதில் தீவிரமான அக்கறை காட்டியதால்தான் எங்களால், கரோனா காலத்தில் பெரும் உயிரிழப்பு வராமல் தடுக்க முடிந்தது" எனக் கூறியுள்ளார்.