
ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த பாம்பன் ரயில் பாலத்தை கடந்த 6ஆம் தேதி திறந்து வைத்த பிரதமர் மோடி, ‘தமிழ்நாட்டின் சில தலைவர்களிடமிருந்து கடிதங்களில் அவர்கள் யாரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை. நாம் தமிழைப் பற்றி பெருமைப்படுகிறோம் என்றால், அனைவரும் குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று விமர்சனம் செய்திருந்தார்.
தமிழ் மொழியில் மட்டுமே இனி அரசாணைகளை வெளியிட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கும் அனுப்பும் அரசாணைகள், சுற்றறிக்ககள் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும். கற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயெ இருக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து வரும் கடிதங்களுக்கு, தமிழ் மொழியிலேயே தான் பதிலளிக்க வேண்டும். அதே போல், அனைத்து அரசுத்துறை இனி தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும். ஆங்கில அரசாணைகள் தமிழில் மொழி பெயர்க்க, செய்தி துறைக்கு அனுப்பலாம் என அரச்ய் அதிகாரிகள், அலுவலர்கள், ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், “மொழி உரிமை போராட்டத்தின் தொடர்ச்சியாக அரசாணைகள் அனைத்தும் தமிழில் வெளியிடப்படும் அனைத்து அதிகாரிகளும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இதன் அடுத்த கட்டமாக அனைத்து உயர்கல்வியும் தமிழில் கற்கவும், நீதிமன்ற மொழியாக தமிழ் விளங்கவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.