Skip to main content

“மாணவர்கள் மனதில் வன்மம்; ஒட்டுமொத்த சமூகமும் கவலை கொள்ள வேண்டும்” - முத்தரசன்

Published on 16/04/2025 | Edited on 16/04/2025

 

 community concerned about growing hatred minds students mutharasan

பாடசாலைகளில் மனித நேயம் மற்றும் சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தும் பண்புகளை வளர்ப்பதில் வணிகமயக் கல்வி தவறியிருப்பதை தொடரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கவலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர், தன்னுடன் படிக்கும் சக மாணவரை அரிவாள் கொண்டு வெட்டியதும், அதனைத் தடுக்க வந்த ஆசிரியரையும் வெட்டியிருப்பதுமான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சிறுவர்கள் மனதில் வன்ம உணர்ச்சி மேலோங்கியிருப்பது குறித்து, ஒட்டு மொத்த சமூகமும் கவலையோடு பரிசீலிக்க வேண்டும்.

கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் நாங்குநேரி தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவனும், அவரது சகோதரியும் வீடு புகுந்து தாக்கப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில் கல்லூரி பயிலும் மாணவர் தாக்கப்பட்டார். அண்மையில் ஒரு பள்ளி மாணவி, வகுப்பறைக்கு வெளியே அமர்ந்து தேர்வெழுத நிர்பந்திக்கபட்டார் என தொடரும் சம்பவங்கள் ஆசிரியர்களுக்கும் புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. இப்போது பாளையங்கோட்டை மாணவர்களிடையே ஏற்பட்ட சிறு சச்சரவு, ஒரு மாதமாக பிஞ்சு மனதில் கனன்று வந்து கொலை வெறியாக வெளிப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்துக்குள் மாணவர், தனது புத்தகப் பையில் அரிவாளை மறைத்துக் கொண்டு வந்தது குறித்து, விரிவாக விசாரிக்க வேண்டும். ஒழுக்க நெறிகளை பயிலும் மாணவர்கள் மனதில் வன்மம் வளர்ந்து வருவது குறித்து ஒட்டு மொத்த சமூகமும் கவலை கொள்ள வேண்டும். பாடசாலைகளில் மனித நேயம் மற்றும் சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தும் பண்புகளை வளர்ப்பதில் வணிகமயக் கல்வி தவறியிருப்பதை தொடரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளை காலமுறைப்படி, பள்ளிகளை ஆய்வு செய்வது, மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து நடத்தும் கலை நிகழ்வுகள், விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிகள் போன்ற வகுப்புகள் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அரிவாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளான மாணவர், ஆசிரியர் இருவருக்கும் தேவையான சிகிச்சை வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்