
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.
அதாவது, கங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்று கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து பிரதமர் மோடியின் இந்த பேச்சு ‘மத வெறுப்பு பேச்சு’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி கபில் சிபல், பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பெண்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் காங்கிரஸ் கொடுப்பதாக பிரதமர் மோடி பேசுகிறார். இந்த நாட்டின் 20 கோடி மக்கள் முக்கியமில்லையா? அவர்களுக்கு ஆசைகள் இல்லையா?
அரசியல் இவ்வளவு நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. வரலாற்றில் இது நடந்ததில்லை. அப்படி நடக்க நான் விரும்பவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்க விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் அதைக் கண்டிக்க வேண்டும் மற்றும் பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.