
மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து கட்சித் தாவல்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என அம்மாநில அரசியல் களம் தினமும் பரபரப்பாகவே நகர்ந்துகொண்டிருக்கிறது. பாஜகவும், மம்தா பானர்ஜியும் தொடர் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான அபிஷேக் பானர்ஜியின் மனைவிக்கு, சட்டவிரோதமாக நிலக்கரி எடுத்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அபிஷேக் பானர்ஜி, “நாட்டின் சட்டத்தில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இருப்பினும் நம்மை அச்சுறுத்துவதற்கு இந்த சூழ்ச்சிகளைப் பயன்படுத்தலாம் என்று அவர்கள் நினைத்தால் அது தவறு. நாங்கள் ஒருபோதும் பயப்பட மாட்டோம்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
சிபிஐ நோட்டீஸ் அனுப்பிய சிலமணி நேரங்களுக்குப் பிறகு, உலக தாய்மொழி தின விழாவில் பேசிய மம்தா பானர்ஜி, யாரையும் குறிப்பிடமால், "நான் உயிரோடு இருக்கும்வரை, எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சமாட்டேன்" எனக் கூறியுள்ளார். மேலும் அவர், “நாங்கள் துப்பாக்கிக்கு எதிராக போராடிவிட்டோம், எலிகளுக்கு எதிராக போராட பயமில்லை" எனவும் தெரிவித்தார்.