"பிரதமர் மோடியின் பேச்சுக்குப் பதில் அளிக்க முற்பட்டபோது எங்களைப் பேசக்கூட அனுமதிக்கவில்லை. எங்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டன" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது ராகுல் காந்தி பிரதமரின் பேச்சுக்கு பதிலளிக்க முயன்றார். ஆனால் பாஜகவினர் கூச்சலிட்டதால், ராகுல் காந்தி தனது இருக்கையில் அமர்ந்தார்.
அப்போது பேசிய மோடி, "நான் கடந்த 30-40 நிமிடங்களாகப் பேசி வருகிறேன் ஆனால், இப்போதுதான் அங்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. சில ட்யூப்லைட்கள் இப்படித்தான் வேலை செய்கின்றன" எனக் கிண்டலாக கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, "பிரதமர் போல் மோடி நடந்து கொள்ளவில்லை. பொதுவாகப் பிரமதருக்கு என ஒரு குறிப்பிட்ட தகுதியும், தனிப்பட்ட நல்ல நடத்தையும் இருக்கும், ஆனால், நம்முடைய பிரதமருக்கு இவை இல்லை. மக்களவையில் நேற்று பிரதமர் மோடியின் பேச்சுக்குப் பதில் அளிக்க எழுந்தபோது எங்களைப் பேசக்கூட அனுமதிக்கவில்லை. எங்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டன" என தெரிவித்துள்ளார்.