ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை அதிரடியாக கலைத்து உத்தரவிட்டது மத்திய அரசு. கடந்த ஜூனில் மெஹபூபா முப்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து பாஜக, மக்கள் ஜனநாயக கூட்டணி அரசு கவிழ்ந்தது இதனால் சட்டமன்றம் முடக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இன்று மெஹபூபா உரிமை கோரினார். இதனை அடுத்து 5 மாதங்களாக முடக்கப்பட்டிருந்த சட்டமன்றத்தை நேற்று இரவு ஜம்மு காஷ்மீர் ஆளுநரால் கலைக்கப்பட்டது.
இதன் பின்னர் இந்த நடவடிக்கையை பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள ஆளுநர் சத்யபால் மாலிக், சட்டமன்ற கலைப்பு என்பது தவறான தருணத்தில் எடுக்கப்பட்டது இல்லை, சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது. குதிரை பேரம் நடப்பதாக இரு தரப்பிலிருந்தும் தகவல் வந்தது.
மாநிலத்தில் தற்போதுதான் பாதுகாப்பு நிலைமை சிறப்பாக இருக்கிறது. ஊடுருவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கல் எறியும் சம்பவம் நடக்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் சுமூகமாக நடந்துள்ளது. இந்த தருணத்தில் குழப்பம் ஏற்படுத்துவது மாநிலத்தின் நலனுக்கு ஏற்றது அல்ல, இக்கட்சிகளில் எவருக்கும் பெரும்பான்மை இல்லை. ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையுடன் யாரும் வரவில்லை. கடந்த ஐந்து மாதங்களாக ஜனநாயகம் செயல்பட்டு கொண்டுதான் இருந்தது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டது. ஆனால், அபாயம ஏற்படும் நிலை வந்ததால் சட்டசபை கலைக்க வேண்டியதாகிவிட்டது.
மேலும் மெஹபூபா, தன்னுடைய அழைப்புகள் மற்றும் பேக்ஸ்களை பார்க்கவில்லை என்று ஆளுநர் மீது புகார் வைத்தது குறித்து பேசிய ஆளுநர், நேற்று மிலாது நபி என்பதால் ஆளுநர் மாளிகையில் ஊழியர்கள் யாரும் இல்லை. இதற்கு முன்பாகவே அவர் என்னை சந்திருக்க வேண்டும். அவருடைய பேக்ஸ்ஸுகள் எனக்கு கிடைத்திருந்தாலும் என்னுடைய முடிவில் எந்தவித மாற்றமும் நிகழ்ந்திருக்காது என்று கூறியுள்ளார்.