உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் 260 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். புத்தர்பிரான் மகாபரிநிர்வானா அடைந்த இடத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்ரீகர்களுக்கு வசதியாக இந்த விமான நிலையம் அமைவதுடன், உலகெங்கும் உள்ள புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையிலும் இந்த விமான நிலையம் செயல்படும்.
இதனைக் குறிக்கும் வகையில் குஷிநகர் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழாவில், இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்திலிருந்து வந்த விமானம், குஷிநகர் விமான நிலையத்தில் முதலில் தரையிறங்கியது. இந்த விமானத்தில் இலங்கையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புத்த துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் வருகை தந்தனர்.
இதற்கிடையியே, இந்த விமான நிலைய திறப்பு விழாவின்போது பேசிய பிரதமர் மோடி, ஆன்மீக பயணத்தில் ஆர்வமாக இருப்பதால் தனக்கு திருப்தியான உணர்வு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். குஷிநகர் விமான நிலைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியது வருமாறு,
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் என்பது பல தசாப்த கால நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் விளைவாகும். இன்று என் மகிழ்ச்சி இரண்டு மடங்காக உள்ளது. ஆன்மீக பயணத்தில் ஆர்வமாக இருப்பதால், எனக்குத் திருப்தியான உணர்வு ஏற்பட்டுள்ளது.
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் வெறும் விமான பயண இணைப்பாக இருக்காது. விவசாயிகள், கால்நடை பராமரிப்பாளர்கள், கடைக்காரர்கள், தொழிலாளர்கள், உள்ளூர் தொழிலதிபர்கள் என அனைவருமே இதன்மூலம் பயனடைவார்கள். இது வணிக சூழல் அமைப்பை உருவாக்கும்; சுற்றுலாத்துறை அதிகபட்ச நன்மைகளைப் பெறும். இது இங்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.
அடுத்த 3 - 4 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்டுகள் ஆகியவை அடங்கிய வலைப்பின்னலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அடுத்த சில வாரங்களில், டெல்லி மற்றும் குஷிநகர் இடையே ஸ்பைஸ் ஜெட் நேரடி விமான சேவையைத் தொடங்குகிறது என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இது உள்ளூர் பயணிகளுக்கும் பக்தர்களுக்கும் உதவும்.
நாட்டின் விமானத் துறையைத் தொழில் ரீதியாக நடத்துவதற்கும், வசதிகள் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவும் ஏர் இந்தியா தொடர்பான ஒரு முக்கிய நடவடிக்கை சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை இந்தியாவின் விமானத்துறைக்குப் புதிய ஆற்றலைக் கொடுக்கும்.”
இவ்வாறு பிரதமர் பிரதமர் மோடி தெரிவித்தார்.