நிபா வைரஸ் முதல் பறவை காய்ச்சல் வரை திடீர் திடீரென உருவாகும் புது புது காய்ச்சலுக்கு பெயர் போனது கேரள மாநிலம். இது போன்ற புது வகையான நோய்கள் பரவும் நேரங்களில் கேரள-தமிழக எல்லைகளில் தீவிரமாக கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கேரளாவில் புதிய வைரஸ் தொற்று தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 'வெஸ்ட் நைல்' என்ற வைரஸால் ஏற்படும் பாதிப்பு அங்கு பரவலாகப் பேசு பொருளாகி உள்ளது. கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள இந்த வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும். இதனால் ஒரு சிலருக்கு கழுத்துப் பகுதி விரைத்து விடும் எனவும் கூறப்படுகிறது. வெஸ்ட் நைல் தாக்கம் கோமா வரை செல்லும் அளவிற்கு இதன் பாதிப்பு இருக்குமாம். மேலும் பசி, பலவீனம், மூளைக்காய்ச்சல், பக்கவாதம் பாதிப்புகளும் இந்த வைரஸ் தாக்கத்தால் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பால் ஏற்படும் காய்ச்சலால் உருவாகும் நீரிழப்பை தடுப்பதற்காக போதிய நீர் மற்றும் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலை மறைக்கும் ஆடையை உடுத்திக்கொள்ள வேண்டும். கொசு வலைகள், கொசு விரட்டிகளை முறையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.