இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி மார்ச் மாதத்துடன் முடிந்த நான்காவது காலாண்டில் ரூபாய் 189.77 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு தெரிவித்தார். சென்னையில் உள்ள இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பத்மஜா வாராக்கடன் அதிகரித்துள்ளதால் தான் ரூபாய் 189.77 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் கூறுகையில் முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூபாய் 131.98 கோடியை இந்தியன் வங்கி லாபமாக ஈட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் காலாண்டில் வங்கியின் வருமானம் ரூபாய் 5537 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் ரூபாய் வங்கியின் வருமானம் ரூபாய் 4954 கோடியாக இருந்தது. நிதி ஆண்டு முழுவதிலும் வங்கியின் லாபம் ரூபாய் 320.23 கோடியாக உள்ளது.
அதே போல் முந்தைய ஆண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூபாய் 1262 கோடியாகும். அதனைத் தொடர்ந்து வங்கியின் வருமானம் ரூபாய் 21073 கோடி ஆகும். இதற்கு முந்தைய ஆண்டில் வங்கியின் வருமானம் ரூபாய் 19531 கோடியாக இருந்தது. எனினும் வங்கியின் வாராக்கடன் அளவு 7.11 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும் வாராக்கடனுக்கு மொத்தம் ரூபாய் 1432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நான்காம் காலாண்டில் ரூபாய் 585 கோடி வாராக்கடன் வசூலிக்கப்பட்டதாக இந்தியன் வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள வங்கிகளில் வாராக்கடனால் வங்கிகள் பெரும்பாலும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக நஷ்டம் அடையும் வங்கிகளை ரிசர்வ் வங்கி லாபத்துடன் இயங்கும் வங்கிகளுடன் இணைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.