இந்தியாவில் பருவ மழை போதிய அளவுக்கு பெய்யாததால், கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் பஞ்சம் தமிழகத்தையும் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக தலைநகர் சென்னை உட்பட பல மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இந்த சூழலில், உலகில் 220 கோடி மக்களுக்கு குடிக்க சுகாதாரமான தண்ணீர் வசதி இல்லை என்று ஐநா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் குழந்தைகளுக்கான ஐ.நா மன்றத்தின் யூனிசெப் அமைப்பு ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் குடிநீர், சுகாதாரம் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்படி உலகில் 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீர் வசதியின்றி தவிப்பது தெரிய வந்துள்ளது. அதே போல், 4.2 பில்லியன் பேர், கை கழுவதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதாரத்தை பேண முடியாமல் தவிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக முழுவதும் தற்போது தண்ணீர் தேவை அதிகரித்து வருவதாகவும், ஆனால் அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தண்ணீரை சேமிக்கவும், தண்ணீர் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் உலக நாடுகள் பின் தங்கி உள்ளன என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளும் நீர் வளத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என ஐநா மன்றம் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.