ட்விட்டர் நிறுவனத்திற்கு இந்தியா சார்பில் எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீர் பகுதியிலிருந்து ட்விட்டரில் நேரலை செய்யப்பட்ட ஒரு வீடியோவில் தவறான ஜியோடேக் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில் தோன்றிய ட்விட்டர் ஜியோடேக்கின்படி ஜம்மு, காஷ்மீர் சீனாவின் பகுதியாகக் காட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரம் இந்தியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை பெற்ற நிலையில், இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்த ட்விட்டர் நிறுவனம், அந்த பிழையை சரிசெய்தது. இந்நிலையில், இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு இந்தியா சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத்துறையின் செயலாளர் அஜய் சாவ்னி, ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டது நாட்டின் இறையாண்மையை அவமதிக்கும் செயல். இதற்கு அரசு கடும் அதிருப்தியை தெரிவிக்கிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் ட்விட்டரின் இச்செயல் அதன் நடுநிலைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியர்களின் உணர்வுகளை ட்விட்டர் மதிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.