இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்தாண்டு மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாக சீனா கூறியுள்ளது.
இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. படை விலக்கல் தொடர்பாகவும், படை குறைப்பு தொடர்பாகவும் இரு நாடுகளிடையே சில தீர்மானங்கள் எட்டப்பட்டன. அந்த தீர்மானங்கள் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.
இந்த சூழலில், சீனாவின் முரண்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, அண்மையில் 50,000 கூடுதல் வீரர்களை சீன எல்லையில் இந்தியா குவித்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் சீன ராணுவம், கிழக்கு லடாக்கின் பல பகுதிகளில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி வந்ததாகவும், அவ்வாறு வந்தபோது ஒரு பகுதியில் மோதல் நடந்ததாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் ஊடகத்தின் செய்திக்கு இந்திய இராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த பிப்ரவரி மாதத்தில் படை விலகல் நடைபெற்ற இடத்தை திரும்ப ஆக்கிரமிக்க இந்திய மற்றும் சீன தரப்புகளால் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை" எனக் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, "ஊடக செய்தியில் கூறப்பட்டது போல் கல்வான் பள்ளத்தாக்கிலோ அல்லது வேறு பகுதியிலோ எந்த மோதலும் நடைபெறவில்லை" எனத் தெரிவித்துள்ள இந்திய ராணுவம், சீனாவுடனான பேச்சுவார்த்தை சீர்குலைந்து விட்டதாக ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது தவறானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது" எனவும் கூறியுள்ளது.
மேலும் "இரு தரப்பும் மீதமுள்ள பிரச்சனைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன" எனக் கூறியுள்ள இந்திய இராணுவம், இரு தரப்பும் தங்களுடைய எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், படைகளை அதிகரிப்பது உள்ளிட்ட சீன இராணுவத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.