ஹரியானா மாநிலத்தில் உள்ள கரவுண்டாவில் உள்ள ஹர்சிங்புரா என்ற கிராமத்தில், 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு.
வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமி ஆழ்துளையில் தவறி விழுந்த செய்தியை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆழ்துளையின் பக்கவாட்டில் பள்ளத்தை தோண்டி சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக ஆழ்துளையில் சிறுமிக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்ட நிலையில், கேமராவில் கால் மட்டுமே தெரிந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் கேமரா மூலம் ஆழ்துளையில் சிக்கிய சிறுமியை தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது ஆழ்துளை கிணற்றில் சிறுமி தலைகுப்புற விழுந்தது தெரிய வந்தது. இருப்பினும் சிறுமியை உயிருடன் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தோல்வியில் முடிந்தது. இந்த சம்பவத்தால் சிறுமியின் கிராமமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் திருச்சி சுர்ஜித் அண்மையில் ஆழ்துளையில் விழுந்து இறந்த நிலையில், மீண்டும் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.