
விரைவில் முடி வளரும் என தனியார் அமைப்பு நடத்திய முகாமிற்கு சென்ற 65 பேர் கண் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடி உதிர்தலுக்கு தீர்வு காண்பதாக 'விரைவில் முடி வளரும் அதிசயம்' (Miracle Hair Growth Camp) என்ற பெயரில் தனியார் அமைப்பு சார்பில் இலவச முகாம் நடத்தப்பட்டது. இதனை நம்பி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த முகாமில் கலந்து கொண்டனர். முகாமில் முடி உதிர்வு பிரச்சனை உள்ளவர்களுக்கு தலையில் தேய்த்துக் கொள்ள எண்ணெய் ஒன்று வழங்கப்பட்டது.
ஆனால் மறுநாள் இரவே அந்த முகாமில் கலந்து கொண்டு அங்கு கொடுக்கப்பட்ட எண்ணெய்யை தேய்த்துக்கொண்ட 65 பேர் கண்களில் ஏற்பட்ட எரிச்சல் உணர்வு காரணமாக உள்ளூர் மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவில் குவிந்தனர்.
முடி உதிர்தலுக்கு தீர்வு காண்பதாகக் கூறப்பட்ட நிகழ்வில் வழங்கப்பட்ட எண்ணெயைப் பூசி, பின்னர் சிகிச்சையின் ஒரு பகுதியாகக் கழுவிய பிறகு, பங்கேற்பாளர்களுக்கு கண்களில் வலி மற்றும் சிவத்தல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்கவும், நிகழ்வை ஏற்பாடு செய்த நபர்களை அடையாளம் காணவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சங்ரூர் உள்ள அஜித் நகரைச் சேர்ந்த சுக்வீர் சிங் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் மருந்து சட்டத்தின் பிரிவு 124 (தானாக முன்வந்து அமிலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவின் கீழ் ஜே.பி காலனியைச் சேர்ந்த வழக்கறிஞர் தேஜிந்தர் பால் சிங் மற்றும் லூதியானா மாவட்டத்தின் பிலாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த முடிதிருத்தும் அமர்தீப் சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறப்புப் பிரிவு டிஎஸ்பி சஞ்சீவ் சிங்லா தெரிவித்தார். முகாம் நடத்துவதற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்ட நிலையில் அனுமதி இல்லாமல் இந்த முகாம் நடைபெற்றதும் தெரியவந்துள்ளது.