கர்நாடக மாநிலத்தில் காலா படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்விக்கு அம்மாநில முதல்வர் குமாரசாமி விளக்கமளித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி நடித்து, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் காலா. இந்தப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி உள்ளது இந்தத் திரைப்படம். ஏற்கெனவே ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான கபாலி, ரசிகர்கள் மத்தியில் மாறுபட்ட விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் இதே கூட்டணியில் உருவாகியிருக்கும் காலா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால், காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினி தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்ததால், கர்நாடக மாநிலத்தில் காலா படம் திரையிடப்படாது என கர்நாடக சினிமா வர்த்தக சபை தெரிவித்திருந்தது. அதேசமயம், கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து, காலா திரையிடல் குறித்து நிச்சயம் முறையிடுவோம் என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் இதுகுறித்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, காலா படம் கர்நாடக மாநிலத்தில் ரிலீஸ் ஆவதை கன்னட மக்கள் விரும்பவில்லை. நான் இந்த விவகாரத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். எனவே, ஆலோசித்து எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.