'இந்தி தெரியாதவர்கள் பயிற்சியிலிருந்து வெளியேறுங்கள்' என ஆயுஷ் அமைச்சக செயலர் கூறியதற்குக் கண்டனம் தெரிவித்து, ஆயுஷ் அமைச்சகத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.
ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் இணைந்து கடந்த 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை யோகா, நேச்சுரோபதி மருத்துவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வழங்கின. இதில் தமிழகத்திலிருந்து 37 மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து 350க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது, ஆயுஷ் அமைச்சக செயலர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியுள்ளார்.
அப்போது, இந்தி தெரியாத மருத்துவர்கள் ஆங்கிலத்தில் பேசக் கூறியுள்ளனர். ஆனால், "இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள்" என மருத்துவர்களிடம் ராஜேஷ் கொடேஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சையானது. இந்நிலையில், ஆயுஷ் அமைச்சக செயலரின் இந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.
அந்தக் கடிதத்தில், "மருத்துவத் துறையின் பன்முகத் தன்மைக்கான அடையாளமாக இருக்கும் ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில், இந்தி இல்லாத மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் மீது இந்தியைத் திணிக்க முயன்ற இந்தச் சம்பவம் நடந்தது ஏன் எனப் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழகம் எந்த ஒரு மொழிக்கும் எதிரான மாநிலம் அல்ல, மொழி திணிப்பிற்கு எதிரான மாநிலம் மட்டுமே என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கரோனா பரவலைக் கையாளுவது குறித்த பயிற்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இப்படி நடந்துள்ளது வருந்தத்தக்கதாக உள்ளது.
நிகழ்ச்சியின் நோக்கத்தை மறந்து, பேசும் மொழியை முன்னிலைப்படுத்தியது, தொற்றுநோயைக் கையாளுவதில் அவர் எப்படிச் செயலாற்றுவார் என்பதை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தின் தவறான முன்னிலைப்படுத்துதலைச் சுட்டிக்காட்ட வேண்டியது ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எனது கடமை. இந்த விவகாரத்தில் ஆயுஷ் அமைச்சகம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சர்ச்சைகள் ஏற்படாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.