பாஜக வின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு காலமானார்.
இந்நிலையில் இறப்பதற்கு முன்பாக அவர் போனில் பேசிய கடைசி அழைப்பு குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை வீரரான குல்புஷன் ஜாதவுக்காக அண்மையில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி தேடி தந்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உடன் தான் சுஷ்மா கடைசியாக போனில் பேசியுள்ளார்.
இந்த வழக்கிற்காக ஹரிஷ் சால்வே ஊதியமாக ஒரு ரூபாய் பெற்றுக்கொள்வதாக கூறியிருந்தார். இந்நிலையில் அந்த வழக்கிற்கான ஊதியமாக ஒரு ரூபாயை அடுத்த நாள் மாலை வந்து வாங்கிக்கொள்ளும்படி சுஷ்மா அவரிடம் பேசியுள்ளார். அது ஒரு உணர்ச்சிகரமான உரையாடலாக இருந்ததாகவும், மேலும் அழைப்பை துண்டித்த 10 நிமிடங்களில் அவருக்கு மாரடைப்பு வந்தாகவும் அவர் உருக்கமாக கூறியுள்ளார்.