புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட எந்தத் தடையும் இல்லை என புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் அந்தந்த மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் செப்டம்பர் 10ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட உள்ளது. தற்போது நிலவிவரும் சூழலைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவிற்கு பாஜக உள்ளிட்ட பல இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட எந்தத் தடையும் இல்லை என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியைப் போல தெலங்கானாவிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரிவித்தார். மேலும், மக்கள் கட்டுப்பாடுகளுடன் இறைவனை வணங்க வேண்டும் என நினைக்கும்போது அதற்கு அரசாங்கம் செவி சாய்ப்பதில் தவறில்லை எனக் கூறிய தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானாவில் மிக உயரமான விநாயகர் சிலையைத் திறந்துவைத்து, அந்த விழாவை தான் தொடங்கிவைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.