![Girl harassed; private school sealed](http://image.nakkheeran.in/cdn/farfuture/hYcrNwhoFLNSYL2iU55cSW2Ja-GlHaZEAce0ZqPTHZ4/1739550296/sites/default/files/inline-images/a2562.jpg)
புதுச்சேரியில் தனியார் பள்ளியில் ஆசிரியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெற்றோர்களும் உறவினர்களும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சிறுமி ஒருவருக்கு பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் சிறுமியின் உறவினர்களும் பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டதோடு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் கொடுத்தும் வழக்குப்பதிவு செய்யவில்லை. விசாரணை நடத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளியின் உரிமையாளர் ஒரு கட்சிக்கு நெருக்கமாக இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர் என சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் போராட்டம் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் அது தனியார் பள்ளியில் புகுந்து பொதுமக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சம்பந்தப்பட்ட பள்ளியை சீலிட்டு மூட உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் ''பள்ளியை மூடி சீல் வைக்க உத்தரவிட்டுள்ளோம். பள்ளியின் மேனேஜ்மென்ட் மீது சரியான நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற சம்பவம் மீண்டும் பாண்டிச்சேரியில் நடக்காமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அரசின் சார்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதி அளித்தார்.