![Public besieges private school](http://image.nakkheeran.in/cdn/farfuture/2evnUjt_IsBVeEGALWZM58sGfij3EpZSSSqpnoX2Cro/1739538208/sites/default/files/inline-images/a2558.jpg)
புதுச்சேரியில் தனியார் பள்ளியில் ஆசிரியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெற்றோர்களும் உறவினர்களும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சிறுமி ஒருவருக்கு பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் சிறுமியின் உறவினர்களும் பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டதோடு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் கொடுத்தும் வழக்குப்பதிவு செய்யவில்லை. விசாரணை நடத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளியின் உரிமையாளர் ஒரு கட்சிக்கு நெருக்கமாக இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர் என சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.