இஸ்ரோவில் 70க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் தாமதமாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரோ, வருகிற 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டிருந்தது. ரூ.10 ஆயிரம் கோடி செலவில் இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஒருபுறம் விண்கலம் தயாரிப்பு மறுபுறம் ரஷ்யாவில் விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி என இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இஸ்ரோவில் 70க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் ‘ககன்யான்’ திட்டம் தாமதமாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரோ தலைவர் சிவன் இதுகுறித்து தெரிவிக்கையில், "இஸ்ரோவின் பல்வேறு மையங்களில் பணியாற்றிய 70-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகள் தொய்வடைந்துள்ளதால் ஆகஸ்ட் 2022 -ல் திட்டமிடப்பட்டிருந்த ககன்யான் திட்டம் சற்று தாமதமாகலாம். குறித்த காலத்திற்குள் திட்டத்தைச் செயல்படுத்த இயலாத நிலை உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.