Skip to main content

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு; தலைவர்கள் நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி (வயது 80) உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் இன்று அதிகாலை 4.25 மணியளவில் காலமானார். கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான உம்மன் சாண்டி கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை என இருமுறை கேரள மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.

 

கேரளாவில் உள்ள கோட்டையம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் 1970 முதல் 2021 வரை காங்கிரஸ்  கட்சி சார்பாக 12 முறை வெற்றி பெற்று தொடர்ந்து 52 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 52 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆவார்.

 

இந்நிலையில் பெங்களூருவில் அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் உம்மன் சாண்டி மறைவு குறித்து தனது டுவிட்டர் பதிவில், “கேரள முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ஒரு உண்மையான மக்கள் தலைவர் ஆவார். பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். உம்மன்சாண்டியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவரது குடும்பத்தினருக்கும் கேரள மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக உம்மன் சாண்டி உடலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.  மேலும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் உம்மன் சாண்டி மறைவை தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கேரளா மாநிலம் முழுவதும்  இன்று ஒருநாள் பொது விடுமுறை அறிவித்து கேரள மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்