நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல், வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 என நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. மத்திய பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் பிடல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தலின் போது நடைபெற இருந்தது. அந்த தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வகையில், பிடல் தொகுதி வேட்பாளராக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அசோக் பலவி வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பலவி நேற்று முன் தினம் (09-04-24) மாரடைப்பு காரணமாக திடீரென்று உயிரிழந்துவிட்டார். இதனால், ஏப்ரல் 26ஆம் தேதி அன்று பிடல் தொகுதியில் நடைபெறவிருந்த தேர்தல் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது, ‘தேர்தலின் போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சியின் வேட்பாளர் உயிரிழக்கும் வகையில், அந்தத் தொகுதிக்கு வேறு புதிய வேட்பாளரை அக்கட்சி அறிவிக்க அவகாசம் கொடுக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 52ன்படி சம்பந்தப்பட்ட தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படும். அந்த வகையில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பலவி கடந்த 9ஆம் தேதி உயிரிழந்த நிலையில், பிடல் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், இந்தத் தொகுதிக்கான வாக்கு பதிவானது, மூன்றாம் கட்ட தேர்தலின் போது மே 7ஆம் தேதி நடைபெறும்’ என்று அறிவித்துள்ளது.