'Z+' பிரிவு பாதுகாப்பு கேட்டு சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) அதர் பூனவல்லா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் 'Z+' பாதுகாப்பு தேவை. கரோனா தடுப்பூசி கோவிஷீல்டை விரைந்து தருமாறு மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே 'Z+' பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. இதனால் கரோனா தடுப்பூசிகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசும் மாநில அரசுகளும் கரோனா தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்திடம் ஆர்டர் செய்துள்ளனர். இருப்பினும், ஒரே நேரத்தில் மருந்துகள் கேட்டு அதிக ஆர்டர்கள் வருவதால், அவற்றை உரிய நேரத்தில் டெலிவரி செய்ய முடியாத நிலையில் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் உள்ளது.
இதனால், பல்வேறு தரப்பில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தனது குடும்பத்துடன் லண்டன் சென்றுள்ளார்.
இதனிடையே, சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதர் பூனவல்லாவுக்கு 'Y+' பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அவருக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வந்தனர். இந்த நிலையில், 'Z+' பாதுகாப்பு கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.