அதிவிரைவு ரயில்கள் புறப்பட 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முக்கிய போக்குவரத்து என்றால் அது ரயில் போக்குவரத்து தான். நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் பயண முறையாக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. ஆனால் சில நேரங்களில் ஏற்படும் காலதாமதங்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை களைய இந்தியன் ரயில்வே தொடர்ந்து பல்வேறு முயற்சிகளையும், அறிவிப்புகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் கிளம்புவதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் அந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்ற புதிய நடைமுறை ரயில்வே நிர்வாகத்தால் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி கொடுக்கப்படும் உணவு காலை சிற்றுண்டியா? அல்லது மதிய உணவா என்பதை பயணிகளே தேர்வு செய்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளதாம். ஆனால் இந்த அறிவிப்பு அனைத்து ரயில்களுக்கும் பொருந்தாது. அதிக தூரம் பயணிக்கும் மேற்கண்ட ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட சில அதிவிரைவு பிரீமியம் ரயில்களில் மட்டும் நடைமுறைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.